Tamil Stories தமிழ் கதைகள்
5.61K subscribers
1 video
8 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
கதை #S36
நம்முடைய மதிப்பு


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம்.

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
கதை #S37
தேநீர் விருந்து


அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை.

அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார்.

ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ-மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.

மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேநீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார்.

பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேநீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.

அந்தத் தம்ளர்களில் தேநீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேநீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலையை உபயோகித்து அந்தத் தேநீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார்.” எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?” அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

” எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேநீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேநீர் போல. தம்ளர்களின் தரம் தேநீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப்படுகிறீர்கள். வாழ்க்கை என்ற தேநீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள் தோற்றங்களில் அதிக கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.” அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள்.

சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார். ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.
கதை #S38
நேர்மையானவன்


ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் அந்த நேர்மையானவனும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் நேர்மையானவன் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். நேர்மையானவன் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

நேர்மையானவனும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். நேர்மையானவன் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

நேர்மையானவன் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி நேர்மையானவனிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி நேர்மையானவனை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு நேர்மையானவன் தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். நேர்மையானவனுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். இவன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

நாம் சொல்லும் சொல் நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!
கதை #S39
பணக்காரரின்பதில்!


ஒரு அழகான இளம்பெண், “உலக பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இது குறித்து இளம்பெண்கூறியதாவது, “என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார். இந்த பதிவை பார்த்த ஒரு பணக்காரர் அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது,

“உங்களை போல் பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன்.

எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று. மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று.

பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால், பணம் எனும் ஆண் அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும்.

செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்து கொள்ள மாட்டார்.

எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதையும் மறந்து விட்டு, நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்” என்றார்.
கதை #S40
கோபத்தின் பலமும் அதன் வடிவமும்


ஒரு முறை ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது நேரங்கடந்து நள்ளிரவாகிவிட்டதால், மூவரும் ஒரிடத்தில் தங்கி உறங்கி விட்டு, விடிந்த பின் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.

காட்டில் கொடிய மிருகங்கள் இருக்கும் காரணத்தினால், மூவரும் ஒரே நேரத்தில் உறங்கக்கூடாது என்று, ஜாமத்திற்கு ஒருவர் உறங்காமல் மற்ற இருவருக்கும் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி முதலில் அர்ஜுனன் காவல் இருக்க ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்க ஆரம்பித்தனர்.

அப்போது திடீரென ஒரு புகை மண்டலம் தோன்றியது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிவந்தது. அகன்ற நாசியும், கோரப் பற்களும், பெரியக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். ஒரு மரத்தடியில் பலராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் தூங்குவதையும், அவர்களுக்கு அர்ஜுனன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் அவ்விருவரின் அருகில் சென்றது.

அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அந்த உருவத்தைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம், அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும், அதற்கு நீ எனக்கு உதவ வேண்டும் என்று அர்ஜுனனிடம் கேட்டது. அதைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்ட அர்ஜுனன் அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதாகியது. அர்ஜுனன் இன்னும் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அதனுடன் சண்டையிட்ட போது, அதன் வடிவம் பூதகரமாகியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமத்திற்கு காவலிருப்பது பலராமர் முறை என்பதால், அவரை எழுப்பி விட்டு அர்ஜூனன் உறங்க ஆரம்பித்தான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போலவே பலராமரிடமும் கூறியது. அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் கடுமையாகச் சண்டையிட்டார்.

அவ்வுருவமும் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின்பு அர்ஜுனனைத் தாக்கியதைப் போலவே, பலராமரையும் கடுமையாகத் தாக்கி விட்டு, மறைந்தது அவ்வுருவம்.

மூன்றாம் ஜாமம் காவலிருப்பது ஸ்ரீகிருஷ்ணரின் முறையாவதால், அவரைக் காவலுக்கு எழுப்பி விட்டு பலராமர் படுக்கச் சென்றார். இப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா பலமாகச் சிரித்தார்.

” ஏன் சிரிக்கிறாய்”?! எனக் கேட்டது அவ்வுருவம்.

“உனது தூக்கிய பற்களும், பெரிய முட்டைக் கண்களையும் கண்டு தான்” என சிரிப்பை அடக்க முடியாமல் கூறினார். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அவ்வுருவம் ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாறாமல் அக்கொடிய உருவத்துடன் சண்டையிட்டார்.

கிருஷ்ணர், சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே போனது. இறுதியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுதும் விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் உறக்கத்திலிருந்து எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும், அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் தனது துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, “நீங்கள் இருவரும் நேற்று ஜாமத்தில் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான்” எனக் கூறினார்.

“நீங்கள் இருவரும் அதனுடன் சண்டையிடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள்”. உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும், வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால், இதன் பலமும், வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது”.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு, புன்னகையோடு வெளியேறி விலகிச் சென்று விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். “கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்ற உண்மையை எடுத்துக்காட்டினார். ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் வாழ்வின் பல சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்

இப்படித் தான் நாமம் பல விஷயங்களில் எதிர் வினையாற்றாமலிருந்தாலே, அவ்விஷயம் மிகப்பெரிய பிரச்சனை ஆகாமல் பிசுபிசுத்துப் இந்த புழுப் போல் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.
கதை #S41
பற்றற்ற நிலை


ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை.

இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அனைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.

அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை “ என்று கூறினான்.

இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்க்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான்.

இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை.

நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்.

அந்த எண்ணமே பற்றற்ற நிலை.
கதை #S42
எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள்?


காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒருகார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.

மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டு கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்!).

இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த. பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது.

பாடம்: உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,
வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது...
கதை #S43
பெரிய கற்கள்


வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். “மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.”

வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச்செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீதுவைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார், “ஜாடி நிறைந்து விட்டதா?”

அனைத்து மாணவர்களும் கோரஸாக, “யெஸ்...ஸார்!”

சலனமில்லாமல் “நல்லது” எ‎ன்ற பேராசிரியர், பி‎ன்சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போடஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில்ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்புசெய்தன.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்து கேட்கிறார். “ஜாடி நிறைந்து விட்டதா?”

வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும்” அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது” எ‎ன்றார்.

மெல்லிய பு‎ன்னகையுடன் “நல்லது” எ‎ன்றபேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்றுமணலைக் கொண்டு வரச் செய்தார். மணலைகொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்புசெய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும்மணலை அள்ளிப் போட முடிந்தது.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். “ஜாடி நிறைந்து விட்டதா?”

இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, “நிச்சயமாக ‏இல்லை!”

சிரித்த பேராசிரியர் “நல்லது” எ‎ன்றவாறே, ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக்கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச்பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். “ஜாடி நிறைந்துவிட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப்போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டபாடம் எ‎ன்ன?”

ஒரு மாணவர் எழுந்தார். “நமது நேர நிர்வாகம்எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள்செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்துகொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள்மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்”

“இல்லை... அதுவல்ல பாடம்” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒருஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரியகற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள்அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை. குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றைஅந்தந்தக் கால நேரங்களில் சரியாகஉள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிடமுடியாது. விளைவு?”

“ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், “பெரிய கற்கள் என்பவைஎ‎ன் வாழ்க்கையில் யாவை” எ‎ன்று.
கதை #S44
அப்பாவின் எச்சரிக்கை...!!


தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...

ஒரு நாள் மகள் தன் அப்பாவிடம் வந்து கேட்டாள். அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க. என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை... அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா? என கேட்டார்...

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

அப்பா சொன்னார். மகளே... இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.
கதை #S45
ஓட்டப்பந்தயம்


அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டார்ட், கோ

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது. “இப்போ வலி போயிடிச்சா”

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர். பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள். பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள். கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது நடந்த உண்மை. அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான ஆதரவு நிறுவனம். அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள். ஆனால் குணத்தால்?
கதை #S46
குடும்பத்தில் ஒருவர்


"நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா."

அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.

என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.

அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.

காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல், அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார். சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார். அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.

நாட்கள் விரைந்தது. நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை. அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை. அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார். நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார். அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார். சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார். செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.

எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது. நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.

எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார். நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை. நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை. இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.

இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.

அப்படி யார் அவர்? அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.

கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது. இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.

சொல்கிறேன் கேளுங்கள். அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். அவருடைய மனைவியின் பெயர் கம்ப்யூட்டர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி. இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!
கதை #S47
திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்கள்


அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். அந்தக் காட்டில், பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும், வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது. இருவரையும் நேரடியாக மோதவிட்டால், பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.

மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார். " இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்

தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும், சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள். அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம். உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள். பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும். இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும், மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ, சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது. இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்
நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான்,

" தலைவரே, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.

தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது. இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது. தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார்.

இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.

கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம். அங்கே மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.

அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.

"உள்ளே, வாருங்கள் தலைவரே" என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும், மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம்? " என்றார்.

" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான்,

" தலைவரே, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.

தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார். " நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ உன் அறிவாலும், உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய். காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி " என்றார்.

கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும். "உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்
கதை #S48
எப்படி நடந்து கொள்கின்றீர்கள்


காலை உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் தேநீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேநீர் நீங்கள் அலுவலகம் செல்ல அணிந்திருந்த உடையை அசிங்கப்படுத்திவிடுகிறது.

இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிப்பது, நீங்கள் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.

நீங்கள் திட்டுகிறீர்கள். தேநீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக உங்கள் மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறீர்கள். மகள் அழத் தொடங்குவாள். அடுத்ததாக, தேநீர்க் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் மனைவி மீது பழியைப் போடுகிறீர்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சிறிய வாய் யுத்தம்.

கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு உடையை அணிந்து வருகிறீர்கள். அங்கே நீங்கள் உங்கள் மகள் அழுது கொண்டே காலையுணவை முடித்து, பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள்.

சற்று முன் நடந்த நிகழ்வினால் உங்கள் மகள் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள். உங்கள் மனைவியும் உடனடியாக அலுவலகத்திற்குப் போக வேண்டும். ஆகவே, அவசர அவசரமாக மகளை காரில் ஏற்றிக் கொண்டு பாடசாலை நோக்கி விரைகிறீர்கள்.

தாமதித்தினால், 30 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 40 மைல் வேகத்தில் பயணிக்கிறீர்கள். 15 நிமிட தாமதம் மற்றும் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராத தொகையையும் செலுத்திவிட்டு பாடசாலையை அடைகிறீர்கள்.

“போய் வருகிறேன்” என்று கூடச் சொல்லாமல் உங்கள் மகள் பாடசாலைக்குள் ஓடிவிட்டாள்.

20 நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்திற்கு போய்ச்சேர்கிறீர்கள். அப்போதுதான் உணர்கிறீர்கள் பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டதை. அன்றைய தினத்தின் தொடக்கமே குழப்பமாகிவிட்டது. மேலும் மேலும் அது மேசமடைந்து கொண்டே போகிறது.

அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்கிறீர்கள். வீடு வந்தடைந்தவுடன் உங்களுக்கும் உங்கள் மனைவி, மகளுக்குமிடையேயான உறவில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.

ஏன்? காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்.

இந்த நாள் இப்படி குழப்பமாக போனதற்கு காரணம் என்ன?
அ) அந்த கோப்பைத் தேநீரா?
ஆ) அதற்கு காரணமான உங்கள் மகளா?
இ) அபராதம் விதித்த போலீஸ்காரனா?
ஈ) நீங்களா?

சரியான விடை: “ஈ”

அந்தத் தேநீர் சிந்தியதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தேநீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் காரணம்.

நீங்கள் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்க வேண்டும்:

தேநீர் உங்கள் மீது படுகிறது. உங்கள் மகள் அழப் போகிறாள். நீங்கள் அன்பான குரலில், “பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்து கொள் செல்லமே!”

சிந்திய தேநீரை டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து உடையை மாற்றிக் கொண்டு பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள். அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே உங்கள் மகள் பாடசாலை பேருந்தில் ஏறுவதைக் காண்கிறீர்கள். 5 நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் காலை வணக்கத்தை பரிமாறிக் கொள்கிறீர்கள்.

வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?

இரண்டு விதமான நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன.

ஏன்?

ஏனென்றால், நீங்கள் நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம். உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் 10% சம்பவங்களில் உங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. 90%உம் எப்படி நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.
கதை #S49
ஓய்வு நேரத்தில்


ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று...

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்.
கதை #S50
ஒவ்வொரு செயலிலும் மகிழ்ச்சி


அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ…. கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்…. வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன…. ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது. “நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது
கதை #S51
எது தண்டனை, எது பாராட்டு


அந்த நாய்க்கு நல்ல குரல். குரைத்தால், கிராமமே குரைப்பது போல பெரிசாக சப்தம் கேட்கும். இதில் அதற்கு ரொம்ப பெருமை.

இதனால் கிராமத்தைச் சேர்ந்த கொல்லர் ஒருவர் அந்த நாயை விலைக்கு வாங்கினார். அது போகிறா வருகிறவரை யெல்லாம் பார்த்து, பலமாகக் குரைத்ததைக் கண்டு கொல்லானார் பெருமைப்பட்டார்.

ஒருமுறை கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவர் மகளைப் பார்த்து நாய் உற்சாகமாகக் குரைத்தது, துரத்தியது. அந்தப் பெண் தன் தந்தையிடம், "என்ன தலைவர் நீங்கள்? கிராமத்து கண்ட கண்ட நாய்களெல்லாம் என்னைப் பார்த்து குரைப்பதைப் தடுக்க முடியவில்லையே!" என்றாள்.

உடனே கொல்லரைக் கூப்பிட்டு, நாயைக் கட்டிப்போடும்படி சொன்னார். அவர் நாயை சங்கிலி கொண்டுவந்து ஒரு பெரிய மரத்துடன் இணைத்துக் கட்டிவிட்டார். நாயால் நகர முடியவில்லை.

நாய் இதையும் பெருமையாக நினைத்ததுக் கொண்டு "பார்! நம் எஜமானர் என் திறமையை வியந்து மரத்தை இழுப்பதற்க்காகக் கட்டி போட்டிருக்கிறார்" என்று அதை இழுக்க முற்பட்டது. கிராமத்தவர் கைகொட்டிக் சிரித்தார்கள். நாய் அதை பாராட்டு என்று எண்ணிக்கொண்டு இன்னும் பலமாக இழுத்தது.

சிலருக்கு எது தண்டனை, எது பாராட்டு எனபதே தெரியாது.
கதை #S52
கண்ணாடி முன்னால்


அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!“அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?” அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார். “சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”

" பாடமா…? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?"

அப்படிக் கேள். “உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”எத்துணை ஆழமான உவமை இது!

இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது."

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? "

“ஆமாம்”

“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”

“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்."

பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.
கதை #S53
ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை


ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.

தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும்