Tamil Stories தமிழ் கதைகள்
5.61K subscribers
2 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் tamil spiritual Humour positive Change Bliss Fun Peace Thaughts Feelgood Smile short story
Download Telegram
கதை #54
எதிரொலி


ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மீது நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பையன் கல் தடுக்கி கீழ விழுந்து விட்டான்..

அடிபட்டதனால் அவன் “ஆ..ஆ..ஆ..ஆ..ஆ” ன்னு கத்தினான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்தின மாதிரியே “ ஆ ஆ ஆ ஆ ஆ” சத்தம் திரும்ப கேட்டுது. பையன் சத்தம் வரும் திசையை பார்த்து,”நீ யார்” என்று சத்தமாக கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கத்தில் இருந்து” நீ யார்”னு கேட்டுது.பையன் “ நீ ஒரு கோழை" என்று சொன்னான்.அதே வார்த்தை திருப்பி கேட்டுது.. பைனுக்கு ஒரே ஆச்சரியம். அவனின் அப்பாவிடம் கேட்டான்...“அது யாருப்பா அவன்.., நான் சொல்வதை எல்லாம் திரும்ப சொல்றானே” ன்னு கேட்டான் பையன்.

"அவனின் தந்தை சொன்னார். அது யாரும் இல்லை இதை எதிரொலின்னு சொல்வாங்க குட்டிப்பா. இதை கவனி...." என்ற அவன் தந்தை, “நான் உன்னை விரும்புகிறேன்” என்று கத்தினார். அந்தப்பக்கமும் அதே வார்த்தை திரும்ப வந்தது..

"இந்த எதிரொலி போலவே தான் வாழ்க்கையும். நீ என்ன சொல்றீயோ, கொடுக்கிறாயோ அதுதான் உனக்கு திரும்ப கிடைக்கும். நம் வாழ்க்கை நம்முடைய கண்ணாடி பிம்பம் போல பிரதிபலிப்பு தான். உனக்கு நிறைய அன்பு வேணும்னா, உன் மனசு முழுக்க அன்பை நிறப்பு. எல்லோருக்கும் நல்லதையே நினை, உனக்கும் நல்லது நடக்கும்..."
கதை #55
பிரச்சனைக்குத் தீர்வு


ஒருநாள், அந்த துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம்.

“ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

துறவி சிரித்தார். “அரசனே, எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அந்தப் பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழு முதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்!” “அப்புறம், அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டாமா? அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடுவேன், மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்துகொள்வேன்.”

“எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால், என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை. நீ எப்படி?”
கதை #56
ஒட்டகங்கள்


பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்... தூங்கமுடியவில்லை... எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம். முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.

சென்றவன் திரும்பி வந்து, "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.

"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா... " என்றார்...

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா... இரவு முழுவதும் தூங்கவே இல்லை... " என்றான்.

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.

"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை" என்றான்.

முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்...அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது.

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே. தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்.

முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்." என்றான்.

வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது...அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே. ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...

அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.
கதை #57
இவ்ளோ தானா?


ஒரு தந்தையிடம் மகன் தனக்கு ஏதேனும் ஒரு துன்பமோ அல்லது மனக்கவலையோ ஏற்படும் போது வந்து கலங்கி நிற்பான். அப்போது அவனது பிரச்சனையைக் கேட்ட பின் தந்தை ஒரே வார்த்தையில் இவ்ளோதானா? உன் பிரச்சனை எல்லாம் சரியாகிடும் என்பார்.

அவனுக்கும் சில நாட்களில் அந்த பிரச்சனையோ துன்பமோ இல்லாது போய்விடும். அந்த மகனும் வளர்ந்தான். தந்தைக்கும் வயதானது அவரது மகன் தற்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் தந்தையிடம் சிரித்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தான். ஒரு நாள் மகன் தந்தையிடம் கேட்டான் "ஏம்பா நான் எவ்ளோ பெரிய பிரச்சனைனு வந்தாலும் இவ்ளோதானா? அப்படினு கேட்கிற எனக்கும் அந்த பிரச்சனை சுலபமா முடிஞ்சுடுதே எப்படிப்பா?" என்றான்.

அந்த தந்தை சிரித்துக் கொண்டே சொன்னார் " சில வருடங்களுக்கு முன்னாடி பிரச்சனைனா கண்கலங்குவ. நீ கலங்கும் போது அந்த பிரச்சனையை எப்படி தீர்க்குறதுன்றது உனக்கு தெரியாம இருக்கும் நான் இவ்ளோ தானா? அப்படினு கேட்டதும் உன் மனம் இது ஒரு பிரச்சனையே இல்லைனு ஒரு முடிவுக்கு வந்து அந்த பிரச்சனையும் முடிஞ்சுடும். இப்போ எவ்ளோ பெரிய பிரச்சனை உன் முன்னாடி இருந்தாலும் அதற்கான தீர்வு மட்டும் தான் உனக்கு தெரியும். சின்ன வயசில எனக்கு ஏதாவது பிரச்சனைனா என்னை பயமுறுத்த ஆள் இருந்தாங்களே தவிர தைரியம் சொல்ல ஆள் ரொம்ப கம்மியா இருந்தாங்க. அதனால தான் நான் எப்பவும் உன்கிட்ட எந்த பிரச்சனைனாலும் இவ்ளோதானானு கேட்பேன்" அப்படினு சொன்னார்.

நாம எவ்ளோ புத்திசாலியா இருந்தாலும் ஒரு நிமிடம் இவ்வளவா? அப்படினு நினைச்சா நாம அங்கேயே நின்னுடுவோம். ஆனா இவ்ளோதானா? அப்படினு நினைச்சா அதை தாண்டி அடுத்த கட்டத்துக்கு போய்டுவோம்.
கதை #58
கற்பனையான பிரச்சனை


ஒரு பள்ளிக்கூடம். ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார். மாணவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார். “மாணவர்களே... இதன் தீர்வு...”

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான். “ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!” “இல்லை!” என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள். “ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!” “இல்லை... இல்லை!”

மாணவர்கள் விழிக்கிறார்கள். இப்போது ஆசிரியர் விளக்குகிறார். “மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.”

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள். ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார். “இப்போது மறுபடியும் முயல்வோம்...” என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள். “சார், இதன் தீர்வு என்ன?” ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார். “இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!”

மாணவர்கள் அமைதியானார்கள். ஆசிரியர் பேச ஆரம்பித்தார். “மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன்.

உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை: கற்பனையான பிரச்சனைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை: ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே! இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான். இன்றைய மனிதன் கற்பனையான பிரச்சனை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு? ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான். பக்தர்களே! உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்சனைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்
கதை #59
பதட்டமில்லாத சிந்தனை


எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனே, அந்த பெண்மணி கத்தி கூச்சலிட்டபடி எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடணும், நடுங்கும் குரலுடனும் பதறியபடி கைகளை வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயற்சி செய்தார். சற்று நேர முயற்சிக்கு பிறகு அதை தட்டி விட்டுவிட்டார்.

ஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில் வெற்றியும் பெற்றார்.

மீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர் மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் சர்வர் ஒருவரின் தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின் நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார்.

அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா? இல்லை. அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட செய்து உள்ளது. அதே நேரம் அந்த சர்வரின் தீர்க்கமான பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது.

நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மன கட்டுப்பாடு தான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதை விட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும்.
கதை #60
உட்கார்ந்து சாப்பிடலாம்.


ஊர் முழுவதும் ஒரு அறிவிப்பு !

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இதைக் கண்டு பலர் வியந்தனர். இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ருபாயில் வாழ்நாள் முழுவதும் என்பதென்றால் சும்மாவா.

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா அல்லது 4000, 40,000... அப்படி ஏதாவதா என்று..

400 ரூபாய் மட்டுமே என்றான்.

வரிசையில் ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.

அங்கே ஒருவன் நார்காலியை விற்றுக் கொண்டு இருந்தான்.

" வாங்க சார்...வாங்க சார்... ஸ்ட்ராங்கான நாற்காலி சார்.. சீக்கிரத்துல உடையாது சார்..

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார் "என்று கூவினான்.

வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. எல்லா வாக்குறுதிகளும் அப்படியே.
கதை #61
நீங்கள் உபயோகித்த முறை தான்


ஒரு விசிறி வியாபாரி, பனை ஓலையால் ஆன விசிறிகளை விற்றுக் கொண்டு அவன் வீதியில் நடந்து போகிறான். இந்த விசிறி நூறு வருடம்உழைக்கும், அதனால் நூறு ரூபாய் என்று கூவிக் கூவி விற்கிறான்.

தனது மாளிகையின் ஜன்னலிலிருந்து இதைப் பார்த்த மன்னனுக்கு ஒரே வியப்பு. மன்னன் விசிறி வியாபாரியை மாளிகைக்கு அழைத்து, என்ன விளiயாடுகிறாயா.. அற்பமான பனை ஓலை விசிறி இது. ஒரே ஒரு ரூபாய் கூடப் பெறாது. இதற்கு நூறு ரூபாயா? என்று கேட்கிறான்.

மன்னரைத் தான் அதிக விலை சொல்லி ஏமாற்ற முயன்றதை ஒப்புக் கொள்ள விசிறி வியாபாரி தயாராக இல்லை. அதனால் அவன், மன்னா... இது அதிசய விசிறி. நூறு வருடம் உழைக்கக் கூடியது. அதனால் தான் நூறு ரூபாய் என்றான். நூறு ரூபாய் கொடுத்து இந்த விசிறியை வாங்கிக் கொள்கிறேன். ஆனால், இது நூறு வருடம் உழைக்கா விட்டால் உன் தலை துண்டாகிவிடும், ஜாக்கிரதை என்று மன்னர் எச்சரித்து அனுப்பினார்.

சந்தேகப்பட்டது போலவே பனை ஓலை விசிறி, சில நாட்களில் கிழிந்து விட்டது. காவலர்கள் போய் விசிறி வியாபாரியைத் தேடி அரண்மனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மன்னனும் விசிறி வியாபாரியின் தலையை வெட்டச்சொல்லி தீர்ப்பு வழங்கிவிட்டார்.

அந்த நேரம் விசிறி வியாபாரி சொன்னான். மன்னா, நான் இறப்பது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நூறு வருடம் உழைக்கக் கூடிய இந்த விசிறி உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து போனது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதனால் என் தலையைத் துண்டிப்பதற்குமுன் நீங்கள் இந்த விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று ஒரு முறை சொல்ல முடியுமா? என்று கேட்டான்.

சாகப் போகிறவன் என்று மன்னனும் விசிறியை எடுத்து விசிறிக் காட்டினான். விசிறி வியாபாரி பதறுவது போல் நடித்தான். அடடா, இங்கேதான் தவறு நடந்து விட்டது. மன்னா இந்த விசிறி நூறு வருடம் உழைக்கும், இது உண்மை, ஆனால், இதுபோல விசிறக் கூடாது. விசிறியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு முகத்தை நாம்தான் விசிறியின் முன்னால் ஆட்ட வேண்டும் என்று சொன்னான்.

அப்படி உபயோகித்தால் தான் நீண்ட காலம் என் விசிறி உழைக்கும். என் விசிறியின் மேல் குறை இல்லை. நீங்கள் உபயோகித்த முறை தான் தவறு
கதை #62
புகழ்ச்சி செய்பவர்களிடம்

ஒரு ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது. பக்கத்து ஊரில் ஒரு பணக்காரனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்று வரலாம் என்று எண்ணினார்.

அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது. புலவர் பணக்காரனை புகழ்ந்து சில பாடல்கள் பாடினார். பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இருநூறு ரூபாய் தருகிறேன் என்றான். புலவர் மேலும் பாடினார்.

அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் மேலும் உற்சாகத்துடன் பாடினார்.

அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் மேலும் உற்சாகத்துடன் பாடினார்.

அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்" என்றான். புலவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

இறுதியாக பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தான். புலவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

புலவர் பணக்காரனிடம் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் கூறினீர்களே" என்றார். அதற்கு அவன் 'புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய் தருகிறேன் என்று தானே கூறினேன்.

முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன். பிறகு, 'எழு, நூறு ரூபாய் தருகிறேன்" என்றேன்.

நீங்கள் தான் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்றான். புலவர் வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் புலவர் திரும்பிச் சென்றார்.

நீதி : 1) ஏமாற்றுபவர்கள் எப்போதும் ஏமாற்றத்தான் செய்வார்கள்.
2) புகழ்ச்சி செய்பவர்களிடம் மயங்க கூடாது
கதை #63
புத்திசாலி மீன்


சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத்தான் இருந்தது.

சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 100 ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான்.

சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக்கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச்சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார்.

விலை என்னவென்று விசாரித்தபோது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 500 ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான்.

விலையைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், “ என்னப்பா இது? அந்தப் பையனும் இதே மாதிரி மீன்தான் வைத்திருக்கிறான். அவன் விலை 100 ரூபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 500ரூபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார்.

அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத்தான் இரண்டும் ஒரே மாதிரியாகத்தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால்தான் கூடுதல் விலை,” என்றான்.

“அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர்.

“சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால்தான் இவ்வளவு விலை,” என்றான் பையன்.

“உண்மையாகவா?” என்று வியந்தார் வாடிக்கையாளர்.

“வாங்கிப்பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,”

“சரி, சரி, ஒரு கிலோ கொடு. “ட்ரை” பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார்.

அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டுவந்தார்.
புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம்...? ம்ஹும்....! எதுவும் தெரியவில்லை.

அப்போதுதான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று. கடுமையான கோபம் வந்துவிட்டது அவருக்கு. “இன்று அவனைப்போய் “உண்டு அல்லது இல்லை” என்று ஆக்கிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்.

அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா?”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனும், “ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே!” என்று உற்சாகமாகக் கூறினான்.

வந்ததே கோபம் அவருக்கு! “அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? உன் பேச்சைக்கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றிவிட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டுவிடுவேன்”, என்று கத்தினார்.

பையனோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்: சார்,இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னபோது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்கள். என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.”

வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார்.
கதை #64
நானும் புலிதான்டா

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது...... எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு, புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.

மாப்பிளை புலிக்கோ... கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும், சரசரன்னு... புலிக்கிட்ட போய் கை கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு. புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட, "டேய் இத்தனைப் பேரு என்னய தூரமா நின்னு வாழ்த்திட்டு போறானுங்க..... ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே! நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதான்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு !?
கதை #65
நான் புலி.ய்.ய்...டா...!

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!

இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனிபூனை, ஆஸ்திரேலியா பூனை, இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

அமெரிக்கா பூனையல்லவா பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு, கொழுவென இருந்தது!

கடைசி இறுதி சுற்று...., இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!

பார்வையாளர்களுக்கு வியப்பு! சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது, இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!

பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்! போட்டித்துவங்கியது! அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!

சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி! அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு ப்பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்! சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை!

சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.! போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள். மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!

அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!

நான் பூனையே இல்லை.!

புலி.ய்.ய்...டா...!

என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்! பாலும், கறியும் உண்டாலும் பூனை பூனைதான்! பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!
கதை #66
இனிப்பான ஆப்பிள்

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.

அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி.,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்... பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்… தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்...அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
கதை #67
ஐ லவ் யூ அப்பா


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான்.

சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார்.

அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா... என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்.

அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று… அந்த வாசகம்

” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?
கதை #68
அடித்த வலி


அப்பாவுக்கு வயது 108.மகனுக்கு வயது 90. இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.

அப்பா முன்கோபி. சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார். ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார். ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.

“இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?” என்று தந்தை கேட்டர்.

மகன் சொன்னார், “அப்பா, இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும். நானும் பொறுத்துக் கொள்வேன். இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை. ஐயோ! உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.” என்றான்.
கதை #69
சில நிமிட மெளனங்கள்


"வெளியில போறியப்பா? " கேட்டார் அப்பா.

“ஆபீஸ் போறேன் பா” பதில் அளித்தான் மகன்.

“இன்னைக்கு வானிலை சரியா இருக்காதுன்னு செய்தில படிச்சேன் டா, இன்னைக்கு ஒரு நாள் வேணா விடுப்பு எடுத்துகோடா”, அப்பா கூறினார்.

“அப்பா, ஏற்கனவே இந்த மாசம் நிறையா நாள் விடுப்பு எடுத்துட்டேன், அப்பறம் பாருங்க வானம் எவ்வுளவு தெளிவா இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்ல.

“சரி, அப்ப ரெயின் கோட்டையாவது (rain coat) போட்டுட்டு போடா, சொன்னார் அப்பா.

உங்களை சமாளிக்க முடியாது அப்பா,..சரி நான் ரெயின் கோட் போட்டுட்டு போறேன், கிளம்பினான் மகன்.

மகன் தனது பைக்கில்(bike) ஏறி அலுவலகம் சென்றான். அவன் பயணித்த 10 நிமிடத்தில், தீடிரென மழை கொட்ட ஆரம்பித்தது. ரெயின் கோட் போட்டதுனால நனையாமல் அலுவலகம் சென்றான். அலுவலகம் சென்றடைந்தவுடன் தொலைபேசியில் அப்பாவை கூப்பிட்டு, “உங்கள சமாளிக்க முடியாதுல”? என்று சிரித்தான். அப்பா சிரித்தார்.

ஆண்டுகள் கடந்தன.

ஒரு காலை மகன் அலுவலம் கிளம்ப தயாரானான். “இன்னைக்கு வானிலை நல்லா இருக்கு” என்று நினைத்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏறினான். அவன் பயணித்த சில நிமிடத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.

மழையில் நனைந்து கொண்டே அலுவலகம் சென்றான். அலுவலகம் சென்று தனது நாற்காலியில் உட்காந்து, தனது சிறு தோள்பையை கழட்டினான்.

தனது தோள்பையில் இருந்த தனது அப்பாவின் சிறு புகைப்படத்தை பார்த்து சில வினாடிகள் புன்னகை செய்தான். அதன் பிறகு சில நிமிடங்கள் மெளனமாய் தனது தந்தையின் புகை படத்தை உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த சில நிமிட மெளனங்கள் தான் இந்த கதையின் கருத்து.
கதை #70
எனக்கு தான் அப்பா இருக்காரே!

அப்பாவும் மகளும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்.

மகள்: அப்பா.

அப்பா: என்ன டா கண்ணா?

மகள்: அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா: அது தாண்டா பூதம்.

மகள்: அது என்ன பா பண்ணும்?

அப்பா: அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

மகள்: என்ன கேட்டாலும் கொடுக்குமாபா?

அப்பா: ஆமா உனக்கும் வேணுமா அது மாதிரி பூதம்?

மகள்: எனக்கு வேணாம் பா. அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல அதுனால தான் சாமி பூதம் குடுத்து இருக்காரு எனக்கு தான் அப்பா இருக்காரே கேட்ட எல்லாம் வாங்கி கொடுக்க. எனக்கு கடவுள் குடுத்த அற்புத விளக்கு அப்பா தான்..
கதை #71
தீய்ந்த தோசை


அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. “நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், “அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும், கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.
கதை #72
மகனே இன்று முதல் நீ


அந்த அண்ணாச்சி மிகவும் நல்லவர். அவருடைய மனைவி இறந்ததில் இருந்து பெரும் குடிகாரராக மாறிவிட்டார். குடிக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். ஒருநாள் ஒரு பாதிரியார் அவரை குளத்தின் அருகில் சந்தித்தார்.

அவர் மீது கருணைக் கொண்டு அவருக்கு அவரைத் திருத்த நினைத்தார். எனவே அவரை குளத்து நீரில் மூன்று முறை மூழ்கி எழ சொன்னார். அவரும் அவ்வாறே மூன்று முறை மூழ்கி எழுந்தார்.

"மகனே இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்கப்படுவாய். நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும். இனி மேல் மதுஅருந்த மாட்டேன்" என்று.

குடிகார அண்ணாச்சி என்ற அந்தோனி மறுமொழியாக,

"சாமி, சாயா குடிக்கலாமா?" என்று கேட்க,

பாதிரியாரும், "ம் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை" என்றார்.

விட்டிற்கு வந்த குடிகார அண்ணாச்சி, "ரம்" பாட்டிலை பக்கெட்டில் இருந்த தண்ணிரில் 3 முறை முக்கி எடுத்து, "ரம்மே, ரம்மே.... இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்" என்று சொல்லி தனது வேலையே தொடர்ந்தார்.
கதை #73
நல்ல பெயர்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு…!! கடைக்காரர் விரட்டி விட்டார். திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு....

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்... நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது… கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்…

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல்... அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது... கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது… ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க... நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான், நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.