Tamil Stories தமிழ் கதைகள்
5.61K subscribers
1 video
8 links
தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story
Download Telegram
கதை #S74
முட்டாள் மாடு


ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிடக் கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து, எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளைத் தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமேச் சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்குப் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது.

மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று, புல்லின் அளவை அதிகரிக்கக் கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிகப் பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்யச் சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான்.

மாடும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டது. புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்குப் பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று, வழக்கமான கோரிக்கையை வைத்தது.

அப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிகப் புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிகப் புல் கேட்காதே” என்றான்.

தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயேப் பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியைச் சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை.

சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை. உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வரத் தொடங்கியது. “எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்ததாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்கப் போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்” என்றான்.

மாடு தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கதை #S75
அரசனின் தவறு


ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்... ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார். "பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், “பத்து நாட்கள்தானே... சரி” என அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார். முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார். பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான். சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான். அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார். "அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன், இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

நீதி: நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா... அதுல மாற்றமே இருக்காது.
கதை #S76
போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய்


மூன்று அரசியல் வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் தீடிரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.

மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது. மூவரும், மேலோகம் சென்றார்கள் அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புன்ய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கி கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார். பயந்து கொண்டே இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல…

முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னாரு… இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால்,

மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை. அவர் யமதர்ம ராஜா விடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம் அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? என்று வினவ?

உடனே யமதர்ம ராஜா அவர் கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன் நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் யமதர்ம ராஜா உரைத்தார்.

நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.

முதல் போட்டி ஆரம்பம்
நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார் – பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார் அந்த தலைவருக்கு தெரிய வில்லை பாஸ் அகவில்லை.

மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார். அதற்கும், அப்படியை ஆகட்டும் என்று சொன்னார்.

இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெய்த்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி …..

இரண்டாவது போட்டி தொடங்கியது,
நபர் 1 – எப்பொழுது இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தது? 1947 என்று சொல்லி- பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 – அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார்? அதற்க்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார். 1,00,000 – 2,00,000 – 3,00,000.
2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.
நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார்?
அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்பு கொண்டு நரகத்தை அடைந்தார்.

நீதி: “மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காமா விட மாட்டாங்க”
கதை #S77
ஆபிசில் நிறைய வேலை

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர், “நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், “ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”
கதை #S78
மேனேஜரின் இரக்கம்

ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் போய்க்கொண்டிருந்த பொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று," நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார்.

உடனே அவர்களில் ஒருவன்," எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள், அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே மேனேஜர்," அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்.. "நீயும் இவர்களுடன் வரலாம் " என்கிறார்.

உடனே அந்த மற்றொரு ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர்," சரி அவர்களையும் அழைத்து வா" என்கிறார்.

இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், " ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே" என்கிறான்.

மேனேஜர் உடனே," இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.

நீதி: மேனேஜர்களை எப்பொழுதும் நம்பாதீர்கள்.....
கதை #S79
பெரியவரின் இரக்கம்


ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்:
“பாத்து போக கூடாதா? " "என்னடா கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை கொடுத்தார்.. அதோடு "தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்” என்றார்.

மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள். முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் "தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவியோ?" என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். "அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"
கதை #S80
தலைவலிக்கு நல்ல மருந்து


இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.

அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்".
அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.

"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக ஆக இருந்தேன், ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்" என கூறினார்.
கதை #S81
ஆயுள் முழுவதும் வேலையாட்கள்


ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டிக் கொள்வதற்காக ஒரு சலூன் கடைக்குச் சென்றார். அவர் முடி வெட்டிக் கொண்டதும் அதற்குரிய பணத்துக்கு மேல் ஒரு ரூபாய் இலவசமாகக் கொடுத்தார்.

முடி வெட்டுபவருடைய முகம் மாறியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் மட்டுமே சேர்த்து தருவதா? என ஏளனமாக பார்த்தார்.

உங்களிடம் வேலை பார்க்கும் வேலையாட்கள் கூட பத்து ரூபாய் இலவசமாகக் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே தருகிறீர்கள் என்று கேட்டார்.

உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் வேலையாட்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் அப்பெரிய நிறுவனத்தின் முதலாளி.
கதை #S82
மவனே யார் கிட்ட?


நம்மாளு கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

மறுநாள் கடைத்தெருவில் நம்மாளு போய்க் கொண்டிருந்த போது விற்றவன் அவரை சந்தித்தார்.

"அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும்.

அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.

மவனே யார் கிட்ட?
கதை #S83
அரசியல்வாதியா,கொக்கா?


புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.

தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.

உடனே அமைச்சர், ”இது ஊழலுக்கு வழி வகுக்கும். நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.” என்றார்.

தொழில் அதிபர் உடனே “சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம். இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.” என்றார்.

உடனே அமைச்சர், ”ரொம்ப சந்தோசம்,”என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, “அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.”என்றாரே பார்க்கலாம்!.

தொழில் அதிபரே அசந்து விட்டார்.

அரசியல்வாதியா,கொக்கா?
கதை #S84
இது தான் பேங்க் சட்டம்


வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவரிடம். "ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவர், ஏனென்று கேட்க, அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன்..

அந்த முதியவர், இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.

அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவரிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் தாத்தா.. உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது. எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை சிறிது நேரம் ஒதுக்கி வர இயலுமா?" என்று மிகப் பணிவோடு பவ்யமாக கேட்டாள்.

உடனே அந்த முதியவர் "இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டார். உடனே அந்த பெண், "மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள். உடனே அந்த முதியவர் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டுமென்று கூற,

அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள். அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.

அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள். சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்களின் சில சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்
கதை #S85
சிலந்தியின் வலை வலுவானது

வீரன் அவன். ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப் பிரிவிலிருந்து பிரிந்துவிட்டான். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக்கொண்டான். படைப்பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டுமே.” என்கிற ஏக்கம் ஒருபுறம். “எதிரிகளிடம் மாட்டிக்கொண்டுவிடக் கூடாதே” என்கிற பயம் ஒருபுறம்.

அந்த வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. உணவும் கொஞ்சம் நீரும்கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது. கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு சத்தத்தைக் கவனித்தான். செடிகளை விலக்கிக்கொண்டு, சருகுகளை மிதித்துக்கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்குப் பயம்2 உறுதியாகிவிட்டது. நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். தன்னந்தனியாக இருக்கிறான். கூட அவன் தோழர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது. ஒளிவதைத் தவிர வேறு வழியில்லை.

அவசர அவசரமாக ஒளிந்துகொள்ளத் தோதான இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது. அதன்மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது. விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்து கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். கப்பற்படையில் இருந்ததால், ராணுவ நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் அவன் நன்கு அறிவான். வருபவர்கள் நடந்தவிதத்தை வைத்து அவர்கள் யாரையோ தேடிவருகிறார்கள் என்பதை அவன் உணர்வு சொன்னது. “அப்படித் தேடிவரும் பட்சத்தில் நிச்சயமாக இந்தக் குகைகளையும் விட்டுவைக்க மாட்டார்கள். அப்படியானால் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள். கண்டுபிடித்துவிட்டால்..? அவ்வளவுதான் உயிர் உடலில் தங்காது” இப்படி நினைத்ததும் அவன் உடல் நடுங்கியது.

“இப்போது என்ன செய்வது? நாம் தப்பிப்போம் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பிரார்த்தனை. அதை மட்டும்தான் இப்போது செய்ய முடியும்.” அவன் கண்களை மூடி பிரார்த்தித்தான். “கடவுளே. என்னை என் எதிரிகளிடமிருந்து காப்பாற்று. உன்னை மனமார நம்புகிறேன். மனமுருக வேண்டுகிறேன்.” அவன் பிரார்த்தித்த அந்த ஒரு கணத்தில், தான் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று முழுமனதோடு நம்பினான்.

“ஆனால். அது என்ன? கும்பலாகச் சிலர் அந்தக் குன்றின் மேல் ஏறிவருவதுபோலச் சத்தம் கேட்கிறதே! நிச்சயம் அவர்கள்தான். எதிரிகள்தான். அய்யோ. நான் என்ன செய்வேன்?”

இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே அதைப் பார்த்தான். அது ஒரு சிறிய சிலந்தி. உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது பாட்டுக்கு வேலையில் இறங்கியது. அந்தக் குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது. அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

“நான் என்ன கேட்டேன். கடவுள் என்ன செய்கிறார்? கல்லாலான ஒரு சுவரைக் கொண்டு இந்தக் குகை வாசலை கடவுள் மூடியிருக்க வேண்டாமா? ஒரு சிலந்தியை அனுப்பிவைத்திருக்கிறாரே.” என்று நினைத்தான்.

இப்போது சில படை வீரர்கள் வரும் சத்தம் நன்றாகக் கேட்டது. அவர்கள் மேலே வந்துவிட்டார்கள். முதல் குகையருகே அவர்கள் நிற்பதும் அதற்குள்ளே ஓர் ஆள் நுழைந்து, “இங்கே யாரும் இல்லை” என்று சொல்வதும் அவன் காதில் விழுந்தது. அவனுக்கு உடல் தூக்கிவாரிப்போட்டது. குகையின் கடைசி நுனிக்குப்போய் கற்பாறையை ஒட்டி உட்கார்ந்துகொண்டான்.

அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டுகொள்ளவில்லை. அதுபாட்டுக்கு வலை பின்னுவதில் பிஸியாக இருந்தது.

அவர்கள் இரண்டாவது குகைக்குள் நுழைந்து தேடிப் பார்த்தார்கள். எதுவும் அகப்படாமல் அடுத்த குகைக்குள் நுழைந்தார்கள். அதற்கடுத்து அவர்கள் இவனிருக்கும் குகைக்குள்தான் வந்தாக வேண்டும். எப்படியும் ஒருவன் உள்ளே வந்து பார்க்கத்தான் போகிறான். “கடவுளே.” அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், “நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க” என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்துபோனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர்பிழைத்தேவிட்டான்.

இப்போது அவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. குகை வாசலில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறது ஒரு சிலந்தி. அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்றுவிட்டார்கள்.

அவன் கண்களை மூடிக்கொண்டு சொன்னான். “கடவுளே. மிக்க நன்றி. என்னை மன்னித்துவிடு கடவுளே. ஒரு கல் சுவரைவிட நீ அனுப்பிய சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்துவிட்டேன்.
கதை #S86
மகனின் அருகாமை

ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் வந்தார்.

“சார். உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.”

கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். வலி நிவாரணி மாத்திரைகள், மயக்க மருந்துகள் அதிக அளவில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால், கண்களையே மெதுவாகத்தான் அவரால் திறக்க முடிந்தது. நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார்.

அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த சீருடை யூத் மரைன்” (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் யூத் மரைன்” புரோக்ராமில் இருக்கிறான் என்று சொல்லியிருந்தார். அதனால்தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டுபிடித்து அவர் முன்னே நிறுத்தியிருந்து.

இளைஞன் படுக்கைக்கு அருகே போய் நின்றான். அவர், தன் கைகளால் அவன் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும் வாஞ்சையோடும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். பிறகு கண்களை மூடிக்கொண்டாள். நர்ஸ், ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து, முதியவரின் படுக்கைக்கு அருகே போட்டாள். இளைஞன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். அன்று இரவு முழுக்க அவர், அவனுடையக் கைகளைப் பிடித்தபடியே இருந்தார்.

அவ்வப்போது அந்த நர்ஸ், அவர் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக உள்ளே வருவார். இளைஞன், முதியவரின் கைகளைப் பற்றியபடி இருப்பான். ஒருமுறை பொறுக்க முடியாமல் நர்ஸ் சொன்னார். “தம்பி. நீங்க வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே போய் ரெஸ்ட் எடுங்களேன். எவ்வளவு நேரம்தான் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?”

“வேண்டாம். பரவாயில்லை” என்று சொல்லிவிட்டான் அந்த இளைஞன். நர்ஸின் வற்புறுத்தலால் ஒரே ஒரு கப் காபி மட்டும் கேட்டு வாங்கிப் பருகினான். அடுத்த நாள் அதிகாலையில் நர்ஸ் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. அவர் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது.

விடிந்தது. கிழவர் இறந்துபோயிருந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு ஜாக்கிரதையாக விடுவித்து, மெள்ள படுக்கையில் வைத்தான். வெளியே வந்தான். நர்ஸிடம் விஷயத்தைச் சொன்னான்.

“ரொம்ப சாரி தம்பி. உங்க அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்றார் அந்த நர்ஸ்.

“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அப்பா இல்லை. இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை.”

“அவர் உங்க அப்பா இல்லைன்னா, நான் அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு வந்தப்போவே சொல்லியிருக்கலாமே. ஏன் சொல்லலை?”

“நீங்க அவர்கிட்ட என்னைக் கொண்டு வந்து நிறுத்தினப்பவே தப்பா என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்கனு தெரிஞ்சுடுச்சு. நீங்க ரொம்ப அவசரத்துல இருந்தீங்க. அதோட அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குறார்ங்கிறதும், அவன் இப்போ இல்லைன்னும் புரிஞ்சு

அதோட அவர் என் கையைப் பிடிச்சதும், அவரால நான்தான் அவரோட மகனா, இல்லையான்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரோட அந்தக் கடைசி நிமிஷத்துல அவருக்கு எந்த அளவுக்கு அவரோட மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்.”

நர்ஸ் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெள்ள நடந்து வெளியே போனான்.
கதை #S87
உண்மையான மாலை


ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு. இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி “ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்” மாலை வாங்கி தரசொல்றேன். இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் மகள், அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள். மகளுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள். பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

மகள்வின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் மகளுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ. முடியாதுப்பா. நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா.” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா. " என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா. இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” மகள்

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ. முடியாதுப்பா. நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க. முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ். அதமட்டும் நான் தர மட்டேன். ” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் மகள்.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி.” என்றார் அப்பா. சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது. மகள் ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும். சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். மகள் தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர். அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார். "இதை உனக்கு தருவதற்காகத்தான்டா அம்மு. நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன். " என்றார் அப்பா.

இந்த தகப்பன் யாருமல்ல. நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன். அந்த குழந்தை தான் நாம். ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை. அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள். உறவுகள். போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம். அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்.

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன. அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால். போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.
கதை #S88
மலர்க்கொத்து


ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார். இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

வழியில் நிற்காதே. ஓரமாய்ப் போ.” அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.
இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.

உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை “என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.” என்றார். சிறுவன் திரும்பினான்.

சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான். இதென்ன?” தந்தை வியந்தார். இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்…

சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார். சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.
கதை #S89
கயிற்றுப்பாலம்


ஒரு நாள் மாலையில் வாக்கிங் முடித்துக் கொண்டு, ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.

திடீரென, மழைச் சாரல் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான், மனைவி பாலத்தை வந்தடைந்தார்.

மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால், மனைவி கயிற்று பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும், இடியும், சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்.

இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது,
கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்.
அவள் கணவனோ திரும்பியே பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது இப்படி பயந்துபோய் அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்? திரும்பி கூட பார்க்கவில்லையே! என மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்கும் போது, இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள். கணவரை கோபத்தோடு பார்க்கிறாள். அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை மிகுந்த சிரமப்பட்டு தனி ஆளாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் மட்டும் தாங்கி பிடிக்காமல் விட்டிருந்தால், பாலத்தோடு அவன் மனைவியும் பள்ளத்தில் வீழ்ந்து மாய்ந்திருப்பாள்.

அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்!
கதை #S90
இது என் குழந்தை


ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள். சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.

இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.

அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.
கதை #S91
கண்டுபிடித்தற்கு


ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார். அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார். ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார். சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார். மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார். கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார். பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார். இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான். அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் ஒருமுறை சுத்தியால் அடித்ததற்கு ஒரு லட்சம் ரூபாயா? தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான், அதில்

1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய் என்று எழுதி இருந்தது.
கதை #S92
தேவதையின் நிபந்தனை


ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும். அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்.

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.

” நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்.வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.நடந்து கொண்டே இருக்கவேண்டும்.எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது.

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று. என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்.

மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.

பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.
கதை #S93
வாயைத்திறந்தால் இறந்து விடுவாய்!


அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.

ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.

“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.

“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.

“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து.

அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை

“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.

இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.

சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.

கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.